சங்கடப் படலை – அருகிச் செல்லும் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது கிடுகு வேலி கொண்டமைக்கப்படும் – சற்றுப் பிற்பட்ட காலத்தில் சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் ஆன மதில்களும் எல்லைப்படுத்தலின் பொருட்டாக அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு முதலான ஊர்களில் பாரம்பரியமான கல்வேலி எனும் அமைப்புமுறை வழக்கிலுள்ளது. இந்த சுற்றெல்லையுடைய வீட்டமைப்பின் பிரதான நுழைவாயில் சங்கடப்படலை என அழைக்கப்படும் ஒருவகையான படலை அமைப்புடன் காணப்பட்டது.
சங்கடப்படலை என்ற சொல்லின் அடிப்படை அவ்வளவு தெளிவாக இல்லை. படல் என்பது பொதுவாக மூங்கிலால் வரிசையாகக் கட்டப்பட்ட வழித் தடுப்பைக் குறித்துள்ளது. அதிலிருந்து தான் படலை என்பது மருவியுள்ளது என நம்பப்படுகிறது. ஆனால் இதன் முன்னொட்டாகவுள்ள சங்கடம் இவ்விடத்தில் பெறும் பொருள் நிலை தெளிவில்லை. வழிப்போக்கர்களின் பயணச் சங்கடத்தை போக்கும் வாயிலமைவு எனச் சங்கடப்படலைக்குச் சிலவேளைகளில் தரப்படும் சொற்பொருள் விளக்கம் வெறும் சொல்லுக்குப் பொருளாக உருவாகியதா? என்பது தெளிவாகவில்லை.